சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குப்படுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும் 1982-ம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட 18 நலவாரியங்கள் இயங்கி வருகின்றன.
இதில் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம். பின்னர் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்தில் மரணம் மற்றும் பணியிடத்து விபத்து மரணம் முதலிய நிதியுதவி விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்து தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு நிதியுதவித் தொகை நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
உணவு மற்றும் வர்த்தக சேவை டெலிவரி செய்யும் இணையம் சார்ந்த தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்து அனைத்து சலுகைகளையும் பெறமுடியும். பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு மருத்துவக் கல்லூரியில் உயர்கல்வி படிப்பவராக இருந்தால் ஆண்டுதோறும் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.