சேலம் கோட்டை பெருமாள் என்று அழைக்கப்படும் அழகிரிநாதர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வைகாசி தேர்த்திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக மூலவர் பெருமாள், தாயாருக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது.
மேலும், உற்சவ மூர்த்திக்கு பட்டாடை, தங்க கிரீடங்கள் சாத்தப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில் ஆஞ்சநேயர் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஸ்வரி சரவணன், கோவில் செயல் அலுவலர் அனிதா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 9-ந் தேதி வரை சாமி வெள்ளி பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ந் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.