சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது சங்ககிரி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சபரீசன், வாணியர் காலனியைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய 2 பேரும் போதை மாத்திரை விற்பது தெரியவந்தது. இதையடுத்து சபரீசனை போலீசார் கைது செய்தனர். சிவக்குமார் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து சபரீசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இவர்கள் 2 பேரும் கூரியர் பார்சல் சர்வீஸ் மூலம் (வலி நிவாரணி மாத்திரை) போதை மாத்திரைகளை வாங்கி வாலிபர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இளைஞர்கள் போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்புகளில் செலுத்திக் கொள்வதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான சிவக்குமாரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் சிவக்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.