பாப்பம்பாடி: காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க கோரி ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
பாப்பம்பாடி: காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க கோரி ஆர்ப்பாட்டம்
காவிரி உபரிநீர் திட்டத்தின் மூலம் 100 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியை விரைந்து முடிக்க கோரி காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு மற்றும் விவசாயிகள் சங்க அமைப்பு சார்பில் பாப்பம்பாடி ஊராட்சி சின்னப்பிள்ளையூர் புதுஏரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி சரபங்கா உபரிநீர் நடவடிக்கை குழு மாநிலத்தலைவர் வேலன் தலைமை தாங்கினார். 

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பம்பாடி ரஞ்சித், தேசவிளக்கு கண்ணன், உபரிநீர் நடவடிக்கை குழு மாநில செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது காவிரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஏரிகளை சென்றடையாத வண்ணம் உள்ளது. வாய்க்கால் பணிகள் முழுமை அடையாமலும், பெரும்பாலான நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பில் பெரும்பாலான ஏரிகளுக்கு தண்ணீர் சென்றடையாமல் வறண்டு காணப்படுகிறது. 

உபரிநீர் வெளியேற்றப்படும் காலங்களில் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் விவசாய நிலங்கள் வழியாக சென்று பயிர்களை பாழ்படுத்தும் அவல நிலைக்கும் விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். பாப்பம்பாடி புதுஏரி, கோரணம்பட்டி, வடுகப்பட்டி, செட்டிமாங்குறிச்சி, பனங்காட்டு ஏரி, சவுரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீரை நிரப்ப விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி