சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பெரியகளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் திலீப் (வயது 21). இவர் சேலம் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று (ஜூன் 13) காலை திலீப் வீட்டில் இருந்து பல்துலக்கியவாறு நடந்து சென்றார்.
அப்போது அங்கு இருந்த மின்கம்பத்தின் ஸ்டே கம்பியில் அவரது கை பட்டது. இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது திலீப் வழியிலேயே இறந்துவிட்டதுத் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.