மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தத்தில் தூய்மைப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உழைப்பாளர் உரிமை இயக்கத்தின் தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு ரூ. 492 வழங்க வேண்டும் என்றும், தொடர்ச்சியாக 480 நாட்கள் பணி செய்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பாலு, உதயகுமார், தாமரைச்செல்வன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.