தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஒரு வாரம் தீத்தொண்டு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தீயணைப்பு துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அன்படி, நடப்பாண்டு தீத்தொண்டு வாரம் நேற்று தொடங்கியது.
இதனையொட்டி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் உள்ள தீயணைப்பு பயிற்சி மையத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சேலம் மண்டல துணை இயக்குனர் கல்யாணகுமார் தலைமை தாங்கி பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட அலுவலர் மகாலிங்கம் மூர்த்தி, உதவி மாவட்ட அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. இதில் ஆட்டையாம்பட்டி நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.