ஏற்காட்டிற்கு கோடை காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தாண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை நடத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஏற்காடு கோடை விழா-மலர்கண்காட்சியை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்றும், இந்த முறை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சராக ராஜேந்திரன் இருப்பதால், சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அப்போது, வருகிற 22-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை 9 நாட்கள் ஏற்காடு கோடை விழாவை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி அறிவிப்பார். சுற்றுலா பயணிகள் குவியும் அண்ணா பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் 10 ஆயிரம் தொட்டிகளில் சுமார் 2 லட்சம் பூக்களை வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.