இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை முதல் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
ஏற்காடு முழுவதும் பனிமூட்டத்துடன் காணப்பட்டது. இங்கு நிலவிய கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அண்ணா பூங்கா, லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ந்தனர். ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்டபடியே சென்றனர்.
ஏற்காடு ஏரியை சுற்றி பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய விசைப்படகுகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தனர். மேலும் மாலை நேரத்தில் நிலவிய குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் சாலையோர கடைகளில் டீக்கடை, பஜ்ஜி போன்ற உணவு பண்டங்களின் விற்பனை சூடுபிடித்தது.