சேலம்: காரில் கடத்தி வந்த 425 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

69பார்த்தது
சேலம்: காரில் கடத்தி வந்த 425 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக நேற்று அதிகாலை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் சுக்கம்பட்டி உயர்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. 

இதையடுத்து போலீசார் அந்த காரை விரட்டி சென்று சிறிது தூரத்திலேயே மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மெகர்சிங் (வயது 25), அசோக் ராணா (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த 12 மூட்டைக்குள் 425 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும். விசாரணையில் அவர்கள் ஆந்திராவில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. 

இதையடுத்து மெகர்சிங், அசோக் ராணா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி