சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் கண்ணங்கோட்டை பகுதியில், டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஐந்தாவது ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து மொத்தம் 215 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இதில் பெரிய மாடு வகை 28, நடு மாடு வகை 75, சிறிய மாடு வகை 110 என 3 பிரிவுகளில் ஆறு சுற்றுக்களாக பந்தயம் நடத்தப்பட்டது. ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வழியாக நிர்ணயம் செய்யப்பட்ட தூரம் வரை பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்ற முதல் ஏழு மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு, நினைவுக் கோப்பை, கிடாய், சேவல், கோழி, பருத்தி மூட்டை, குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. திரளான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.