சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கருதா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (31). இவரிடம் தேவகோட்டை அழகாபுரி நகரைச் சேர்ந்த சரவணன், அவரது மனைவி சாந்தி, மகள் சந்தியா, மகன் சந்தோஷ், மற்றும் தேவகோட்டை மேலகாவனவயல் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் ஆகியோர் தாங்கள் நிதி நிறுவனம் நடத்துவதாகவும் இதில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் ஐந்து சதவீத வட்டி வழங்குவதாகவும் அத்துடன் இரண்டு வருடத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்கித் தருவதாகவும் கூறினார்கள். இதனை நம்பிய அரவிந்த் முதல் கட்டமாக கடந்த 2023 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ரூ. 10 லட்சம் செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவர்கள் மீதான நம்பிக்கையில் கடந்த 2024 ஆம் வருட அக்டோபர் மாதம் வங்கிப் பரிவர்த்தனை மூலமாக ரூ இரண்டு கோடியே 26 லட்சம் செலுத்தியுள்ளார். இதேபோல அவரது உறவினரான ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமணன் என்பவர் ரூ 55 லட்சத்து 96 ஆயிரம் கொடுத்துள்ளார். இரண்டு பேரும் சேர்ந்து மொத்தமாக ரூ. 2 கோடியே 85 லட்சத்து 10 ஆயிரம் செலுத்தியுள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட சரவணன் உள்ளிட்டவர்கள் ஆறு மாதம் வரை வட்டியைக் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் எதுவும் தராமல் ஏமாற்றிவிட்டதனால் அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தி சரவணன் உள்பட 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.