சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இளம னூரில் சமூகத் தலைவர்கள் புகைப்பட பலகை வைத்தது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கல்வீசி தாக்கியதில் 2 காவலர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர். இருதரப்பும் அடுத்தடுத்து மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மூன்றாவது நாளாக பதற்றம் நீடித்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஒருதரப்பைச் சேர்ந்த 115 பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்த நிலையில், தற்போது மற்றொரு தரப்பைச் சேர்ந்த 28 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அனுமதியின்றி புகைப்பட பலகை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியதாக 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.