சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படைக் காவலர்களால் ஜூன் 28ம் தேதி விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கில், அஜித் குமாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. நீதிபதி ஸ்ரீமதி, அஜித்குமார் கொடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். உயிரிழந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரித்தார்கள், மேலதிகாரி யார் என்று தெரிய வேண்டும் என்றும், நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்றும், யாருடைய அழுத்தம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது என்றும் கேள்வி எழுப்பினர். நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து தீர்ப்பு வழங்கியதாக தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தொடர்புடையவர்களின் செல்போன்களை மீட்டெடுத்து ஆதாரங்களை வெளிக்கொணர வேண்டும் என்றும் வழக்கறிஞர் கணேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.