சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சேதம்பால் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாத்தாள் (40). இவருக்கும் மேலாயூர் கிராமத்தை சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் திருமணமாகி 6 வயதில் கலைவாணன் என்கிற மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கண்ணாத்தாள் தனது தாய்மாமன் மகனான கார்த்திக்ராஜா (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியதில் இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தை பிறந்த பிறகு கார்த்திக்ராஜா கண்ணாத்தாளுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இது குறித்து கண்ணாத்தாள் கார்த்திக்ராஜாவிடம் பேசியபோது கார்த்திக்ராஜா தனக்கு பெண் குழந்தை பிடிக்காது என கூறியுள்ளார். இதனை அடுத்து கார்த்திக்ராஜாவுடனான தொடர்பை துண்டிக்க விரும்பாத கண்ணாத்தாள் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சானாரேந்தல் கிராமத்தில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் தொட்டிக்குள் தனது பெண் குழந்தையை முழ்கவைத்து கொலை செய்துள்ளார். இளையான்குடி போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்கள் மீது சிவகங்கையில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட கண்ணாத்தாள் மற்றும் கார்த்திக்ராஜா ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்புக் கூறினார்.