சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. போதிய இடவசதி இல்லாததால் குப்பைகள் ரோட்டின் இருபுறமும் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்படுவதால், சுற்றுவட்டார பகுதிகளில் புகை மூட்டத்தால் மக்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், அருகிலுள்ள மயானத்தில் உடல்களை தகனம் செய்வதிலும், புதைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து, எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் குப்பை கிடங்கை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கணக்கானோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். சமாதான கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.