சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 500க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நகராட்சி அலுவலகம், பேருந்து நிறுத்தங்கள், சந்தைப்பகுதி, மருத்துவமனை அருகே என மக்கள் கூடும் இடங்களில் நாய்கள் கூட்டமாக காணப்படுகின்றன. இதனால் பெண்கள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துதல், குழந்தைகளை கடிப்பது, இரவு நேரங்களில் நாய்கள் சண்டையிட்டு அலறுவது போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. நாய் கடி சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் தெரு நாய்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.