சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பர்மா காலனி 11ஆம் வார்டு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே விநியோகிக்கப்படுவதாகவும், மாதத்திற்கு சுமார் 15 நாட்களே தண்ணீர் வழங்கப்படுவதாகவும், அதிலும் 10 நாட்களுக்கு தண்ணீர் வருவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்துள்ளதாகவும், மின்சாரப் பிரச்சனை, மோட்டார் பழுது போன்ற காரணங்களால் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பூமிக்கடியில் பதிக்கப்படாமல் மேலாகவே அமைக்கப்பட்டதால் அடிக்கடி உடைந்து விடுகின்றன. இதனால் நோய்த் தொற்று அபாயம் எழுந்துள்ளதோடு, மக்கள் அன்றாட வாழ்வில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பிரச்சனையை விரைந்து தீர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.