சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் துறையினரால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் சகோதரர், சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கேட்டு மாவட்ட நீதிபதி மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து, அவர்களின் வீடுகளுக்கு ரோந்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். வழக்கறிஞர் கார்த்திகைராஜாவின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், எதிரிகள் மற்றும் வழக்கறிஞரை நேரில் சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்றும் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த வழக்கு சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது.