சிவகங்கை அருகே விபத்து பள்ளி மாணவிகள் காயம்

53பார்த்தது
சிவகங்கை அருகே விபத்து பள்ளி மாணவிகள் காயம்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் தற்போது மதுரையில் வசித்து வரும் நிலையில், காரில் சிவகங்கை வழியாக சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்தார். காரை தனபாலன் என்பவர் ஓட்டினார். சிவகங்கையில் மதுரை முக்கம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவிகளான விஜயமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஹேமலதா, சுகப்பிரியா, பனங்காடி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா, இராணியூரைச் சேர்ந்த அகல்யா, ரோஸ் நகரைச் சேர்ந்த சந்தியா ஆகிய 5 மாணவிகளும் சிறப்பு வகுப்புக்குச் சென்றுவிட்டு, இராணியூர் கிராமத்தைச் சேர்ந்த சாலமோகன் என்பவரது ஆட்டோவில் தங்களது கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தனர். 

தொண்டி சாலைப் பாலம் அருகே சென்றபோது ஆடு குறுக்கே வந்ததால் முன்னால் சென்றுகொண்டிருந்த காரை ஓட்டுநர் திடீரென நிறுத்தினார். அப்போது, அதன் மீது பின்னால் வந்த ஷோ் ஆட்டோ மோதியது. இதில் மாணவிகள் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுகப்பிரியாவுக்கு கால் முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி