சிவகங்கை நகரிலிருந்து மேலூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் குதிரைகள் சாலையில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் குதிரைகள் திடீரென சாலையின் குறுக்கே செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு உள்ளிட்ட கடுமையான விபத்துகள் நிகழும் சூழல் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அசம்பாவிதங்கள் நிகழும் முன் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.