சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிபட்டியைச் சேர்ந்த வீரபிரபுவின் மனைவி சின்னபொன்னு (23) கர்ப்பமாக இருந்த நிலையில், நவம்பர் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டதால் சின்னபொன்னு உயிரிழந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பத்தூர் மஸ்தான் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நாகூர்அம்மாள் (50) என்பவர் சின்னபொன்னுவுக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கியது கண்டறியப்பட்டது. நாகூர்அம்மாள் வீட்டில் சோதனை நடத்தியதில் கருக்கலைப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கைப்பற்றப்பட்டன. நாகூர்அம்மாள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் மீது போலி மருத்துவர் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.