ஊத்துமலையில் இளைஞா் தற்கொலை: உறவினா்கள் மறியல்

68பார்த்தது
ஊத்துமலையில் இளைஞா் தற்கொலை: உறவினா்கள் மறியல்
தென்காசி மாவட்டம் ஊத்துமலை ஜேஜே நகரைச் சேர்ந்த அருணாசலம் மகன் மதன்(21). பால் வியாபாரம் செய்து வந்தார். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அண்மையில் மதனை அழைத்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவர் விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. குடும்பத்தினர் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதனால், மதனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவரது உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இச்சம்பவம் குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி