தென்காசி: பயிா்களுக்கான நஷ்டஈடு தொகையை வழங்க கோரிக்கை

68பார்த்தது
தென்காசி: பயிா்களுக்கான நஷ்டஈடு தொகையை வழங்க கோரிக்கை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வன்னிகோனேந்தல் குறுவட்ட பகுதியில் சேதமடைந்த உளுந்து பயிர்களுக்கு அரசு நஷ்டஈடு தொகையை உடனே வழங்க வேண்டும் என தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலர் ஈ. ராஜா எம்எல்ஏவிடம் அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம் வன்னிகோனேந்தல் குறுவட்ட பகுதி பொதுமக்களாகிய நாங்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டு விவசாயம் செய்து வருகிறோம். 

எங்கள் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு விவசாயிகள் உளுந்து பயிரிட்டிருந்தார்கள். பருவநிலை மாற்றத்தினால் பெய்த கனமழையில் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் எங்கள் பகுதி விவசாயிகள் பெரிதும் நஷ்டத்திற்கு ஆளானார்கள். அந்த நஷ்டத்தை ஈடுகட்ட இயலாத நிலையில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஈ. ராஜா எம்எல்ஏ இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி