வாசுதேவநல்லூர் அருகே பண மோசடி: 4 போ் கைது

59பார்த்தது
வாசுதேவநல்லூர் அருகே பண மோசடி: 4 போ் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் தாருகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரா. கிருஷ்ணன் (30). இவர் ஜிந்தா மதாரை தொடர்புகொண்டு, தனது நண்பரின் நகை வாசுதேவநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையைத் திருப்பி ரூ. 20 லட்சம் தேவைப்படுவதாகவும், அதை வாங்கி நீங்கள் விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கலாம் எனவும் கூறியுள்ளார். 

அதனை நம்பிய ஜிந்தா மதார் ரூ. 20.77 லட்சத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ணனுடன் காரில் சென்றார். வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் வங்கி முன்பு ஜிந்தா மதாரை நிற்கச் சொல்லிவிட்டு சென்ற கிருஷ்ணன், நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இலத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், குறிப்பிட்ட அந்த நபரின் கைப்பேசி எண்களை வைத்து அவரது இருப்பிடத்தை ஆய்வு செய்தனர். அந்த நபர் கேரளம் நோக்கிச் சென்றுகொண்டிருப்பது தெரியவந்தது. 

அவரைப் பின்தொடர்ந்து சென்ற போலீசார், கேரள போலீசார் உதவியுடன் அந்த நபர்களைச் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அந்த நபர்கள் தாருகாபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (30), பூலாங்குடியிருப்பைச் சேர்ந்த நஸ்ருதீன் (31), ரியாஸ்கான் (22), அச்சன்புதூரைச் சேர்ந்த மீரான் (31) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி