கும்பகோணம் மாநகராட்சியின் சாதாரண மாமன்றக் கூட்டம் மேயர் க. சரவணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய பேருந்து நிலையத் திட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் நிலவியது. புதிய பேருந்து நிலையம் மாற்றப்பட உள்ள நிலையில், தற்போதைய நிலையத்திற்கு எதற்கு நிதி ஒதுக்கீடு என காங்கிரஸ் உறுப்பினர் ஐயப்பன் கேள்வி எழுப்பினார். பல மாதங்களாகத் தேங்கியுள்ள மழைநீரால் பயிர்ச் சேதம் மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சிபிஎம் உறுப்பினர் செல்வம் குற்றம் சாட்டினார். புதிய பேருந்து நிலைய விவகாரத்தில் முறைகேடான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக உறுப்பினர் பத்மகுமரேசன் கூறியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. புதிய பேருந்து நிலைய விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து விவாதிக்க வேண்டாம் என்று ஆணையர் அறிவுறுத்தினார்.