
ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தைகள் மறியல் போராட்டம்
ஒரத்தநாடு அருகே தளிகைவிடுதியில் உள்ள திருப்பனங்காருடையார் கோயில் கும்பாபிஷேக விழாவில் சம உரிமை வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கோயில் நிர்வாகக் குழுவில் பட்டியல் இனத்தவருக்கும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு நிதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பட்டியல் இனத்தவரை ஒதுக்கிவிட்டு கடந்த 30-ஆம் தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், குடமுழுக்கு விழாவில் தங்களுக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.



























