தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள பாச்சூர், அய்யம்பட்டி, பொய்யுண்டார்கோட்டை, வடக்கூர், தெக்கூர், செல்லம்பட்டி, ஆதனக்கோட்டை, ஆத்தங்கரைப்பட்டி, நெல்லுப்பட்டு, நாட்டரசன்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, கருக்காடிப்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக நாற்றங்கால் விதைத்து நாற்றுகளை உருவாக்கியுள்ளனர். இந்த நாற்றுகள் நன்கு வளர்ந்து பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கிறது. இதையடுத்து இந்த நாற்றுகளை வயலில் நடுவார்கள். இந்த நிலையில் சாகுபடி செய்யவுள்ள வயலில் தண்ணீர் தேக்கி டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்யும் பணியில் தற்போது இப்பகுதி விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து வயல்களின் வரப்புகளில் மண்டிக்கிடக்கும் கோரைப்புற்களை அகற்றி வரப்பு அமைத்து நாற்றுகளை பறித்து வந்து வயல்களில் நடவு செய்யும் பணியை தொடங்குவார்கள்.
இதையடுத்து 3 மாதங்களில் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.