ஒரத்தநாடு: அதீத வெயிலால் மயங்கி விழுந்த.. பாதுகாப்பு வீரர் பலி

84பார்த்தது
ஒரத்தநாடு: அதீத வெயிலால் மயங்கி விழுந்த.. பாதுகாப்பு வீரர் பலி
ஒரத்தநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காசிவிஸ்வநாதா் கோயில் தேரோட்டத்தின் போது வெயிலில் மயங்கி விழுந்து பிஎஸ்எப் வீரா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு யானைக்கார தெருவைச் சோ்ந்த சரவணவேல் மகன் ரமேஷ் (57). இவா் குஜராத் மாநிலத்தில் 84-ஆவது பட்டாலியனில் பிஎஸ்எப் வீரராக பணியாற்றி வந்தாா்.

விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த ரமேஷ், ஞாயிற்றுக்கிழமை ஒரத்தநாட்டில் உள்ள விசாலாட்சியம்மன் சமேத காசி விசுவநாதா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் கலந்துக்கொண்டு தேரோட்டத்தை வழிநடத்தினாா்.

அப்போது தோ், கோமுட்டி தெரு பகுதியில் சென்ற போது, தேருடன் சென்றுக்கொண்டிருந்த ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் ரமேஷை மீட்டு, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

மேலும், வெயிலின் தாக்கத்தால் அவரது உடல் பாதிக்கப்பட்டதால் மயக்கம் ஏற்பட்டு இறந்ததாக கூறியுள்ளனா். இது குறித்து தகவலறிந்த ஒரத்தநாடு போலீஸாா், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரிக்கின்றனா்.
இறந்த ரமேஷூக்கு ஜெயமாலா என்ற மனைவியும், ஆகாஷ் என்ற மகனும், ஆா்த்தி என்ற மகளும் உள்ளனா்.

தொடர்புடைய செய்தி