தஞ்சாவூர் 'சாஸ்த்ரா' நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஜெர்மனியின் ஹெல்ம்ஹோல்ட்ஸ் - சென்ட்ரம் டிரெஸ்டன் - ரோசென்டார்ஃப் நிறுவனத்துடன் இணைந்து குவாண்டம் தொழில்நுட்பங்கள் - கணினி, இணைப்பு மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் இந்தோ - ஜெர்மன் பயிலரங்கம் திங்கள்கிழமை தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற்றது. பயிலரங்கத்தை இந்தோ - ஜெர்மன் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் அறிவியல் அலுவலர் சாகிப் ஷேக் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இந்தியாவின் தொலைத் தொடர்பு பொறியியல் மையத்தின் குவாண்டம் தொழில்நுட்பத் துணை இயக்குநர் கமல் கே. அகர்வால் சிறப்புரையாற்றினார். பின்னர், 'சாஸ்த்ரா' பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும், ரோபோட் ரேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலருமான பத்மப்ரியா பிரவீன்குமாரால் வடிவமைக்கப்பட்ட சக்குரா - க்யூ என்கிற குவாண்டம் அடிப்படையிலான தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இப்பயிலரங்கத்தில் ஜெர்மன் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜி அஸ்டகோவ், ஜெர்மனி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், தொழில் துறையைச் சேர்ந்த 15 புகழ்பெற்ற நிபுணர்கள் கலந்து கொண்டனர்.