தஞ்சாவூர்: விபத்தில் அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி பலி

85பார்த்தது
தஞ்சாவூர்: விபத்தில் அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி பலி
தஞ்சாவூர் அருகே, மூன்று சக்கர வண்டியில் சென்ற, அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை மாலை சம்பவ இடத்திலேயே இறந்தார். தஞ்சாவூர் – மன்னார்குடி நெடுஞ்சாலையில் மன்னார்குடி பிரிவு சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர தள்ளுவண்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அந்த மாற்றுத்திறனாளி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. 

இதில் தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ்-ல் இருந்தவர்கள் இதுகுறித்து தாலுகா காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு தாலுகா காவல்துறையினர் விரைந்து சென்று இறந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், அவர் மீது மோதிய வாகனம் எது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.