தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடக்கூர் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக்கோரி கிராம மக்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் - வெட்டிக்காடு சாலையில் மரக்கிளைகள் மற்றும் முள்செடிகளைப் போட்டு போக்குவரத்தை மறித்து, 'எங்கள் ஊருக்கு மதுக்கடை வேண்டாம்' என ஆவேசமாக கோஷமிட்டனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, வட்டாட்சியர் யுவராஜ் மற்றும் காவல்துறையினர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கடும் எதிர்ப்பால், கடை தற்காலிகமாக மூடப்பட்டது. நாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.