பாபநாசம்: டாஸ்மாக்கில் திருடிய இரண்டு பேருக்கு மாவு கட்டு

574பார்த்தது
பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரத்தில் டாஸ்மாக் கடை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 3500 ரூபாய் பணம் மற்றும் மது பாட்டில்களை திருடி சென்றனர். இது குறித்து பாபநாசம் துணை போலீஸ் சூப்பரண்ட் முருகவேல் மற்றும் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கபிஸ்தலம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் அந்த வாலிபர்களை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது ஆடுதுறை பெருமாள் கோவில் அருகே சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி இரண்டு பேரும் கீழே விழுந்தனர். இதில் அவர்களின் கை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை அடுத்து இருவரையும் போலீசார் பிடித்து சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் மதுரை மாவட்டம் பெரிய பூலாம்பட்டி சேர்ந்த இருளாண்டி மகன் மாரிமுத்து, தஞ்சை அருகே அம்மன் பேட்டை சேர்ந்த ரத்தின மகன் தளபதி என்பதும் இவர்கள்தான் கணபதி அக்ரஹாரம் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மது பாட்டில்களை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதை எடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி