தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கி தஞ்சை மாவட்டம் எனவும், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் உள்ளடக்கி கும்பகோணத்தை மாவட்டமாகவும் அறிவிக்க வேண்டும்.
இதேபோல் பட்டுக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி சட்டசபைத் தொகுதியைச் சேர்த்து பட்டுக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குறைந்த தொலைவில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் எளிதில் அணுகுவதற்கு மாவட்டப் பிரிவினை மிகவும் அவசியமாகிறது. எனவே மேற்கண்ட காரணங்களைக் கருத்தில்கொண்டு மாவட்டப் பிரிவினைக்கான கருத்துக்களை கலெக்டர் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.