தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தொடங்கப்பட்ட நடப்போம் நலம் பெறுவோம் என்கிற 8 கி.மீ. ஆரோக்கிய நடைப்பயிற்சி திட்டம் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, தஞ்சாவூரில் அன்னை சத்யா நடைப்பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நடைப்பயிற்சியைத் தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய இந்த நடைப்பயிற்சி புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அரங்கத்தில் நிறைவடைந்தது. மாநகர நல அலுவலர் எஸ். நமசிவாயம், சங்கத் தலைவர் ஜி. சீனிவாசன், செயலர் ரெ. ஜெயக்குமார், துணைத் தலைவர் குமார், முருகன், சுரேஷ் உள்பட 200-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.