தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர காவல்துறையினருக்கு, கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், பட்டுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் மாரிமுத்து, காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டை புறவழிச்சாலை அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு காரில் சோதனை மேற்கொண்டனர். அதில் விற்பனைக்காக 4 கிலோ 700 கிராம் கொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து காரில் வந்த 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் கீழவாடியக்காடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் மகேஷ் (33), மதுக்கூர் பகுதியை சேர்ந்த சன்னாசி என்பவரின் மகன் விவேக் (34), பட்டுக்கோட்டை பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த அமீர் மைதீன் என்பவரின் மகன் அன்வர் பாட்ஷா (29) எனத் தெரிய வந்தது. மேலும் பட்டுக்கோட்டை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பட்டுக்கோட்டை நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மகேஷ் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ 700 கிராம் கஞ்சா, ரூ.4.20 லட்சம் பணம் மற்றும் ஒரு காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் மகேஷ் காவல்துறை சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அவர் மீது முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.