மதுரை: போக்குவரத்து ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

58பார்த்தது
மதுரை: போக்குவரத்து ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தாராபுரம் கிளை ஓட்டுநர் கணேசன், சிறப்பு பேருந்து இயக்கத்தில், மதுரை பேருந்து நிலையம் வந்து புறப்படுவதற்கு காத்திருந்தார். பயணிகள் தாராபுரம் செல்வதற்கு நேரம் கேட்டபோது, அங்குள்ள நேரக்காப்பாளரிடம் சென்று கேளுங்கள் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பயணிகளுக்கும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பணியிலிருந்த துணை மேலாளருக்கும் நடந்த சம்பவத்தில், துணை மேலாளர் மாரிமுத்து என்பவர், ஓட்டுநர் கணேசனை பயணிகள் முன்னிலையில் காலணியால் சரமாரியாக அடித்துள்ளார். 

இந்த சம்பவத்தை கண்டித்து ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில், தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகர் கிளை முன்பாக திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் ஏஐடியுசி பொதுச் செயலாளர் எஸ். தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். சிஐடியு பொருளாளர் எஸ். ராமசாமி முன்னிலை வகித்தார். ஏஐடியுசி போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன் கண்டன உரையாற்றினார். 

தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் கைவிடப்பட வேண்டும். ஓட்டுநரை காலணியால் அடித்த துணை மேலாளர் பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் எம். தமிழ் மன்னன், எம். பி. இளங்கோவன், பாண்டியன், பாஸ்கர், செந்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி