சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நலவாரிய தலைவர் ஜோசப்ஸ்டாலின் தலைமையில் மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில், நலவாரிய சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்திருந்த 1,832 பேரில் முதற்கட்டமாக 10 மீனவ மகளிருக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. மீதமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்திற்குள் நலவாரிய அட்டைகள் வழங்கப்படும் என தலைவர் உறுதியளித்தார். மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். நாகை மண்டலம் இணை இயக்குனர் ஷர்மிளா, தஞ்சை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.