தஞ்சாவூர் மேலவீதியிலுள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் சொத்து மீட்புக் குழு ஆய்வு செய்தது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளைப் பாதுகாக்கவும், மீட்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து அந்தந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகள் பாதுகாப்பாக உள்ளதா? வேறு யாராவது ஆக்கிரமித்துள்ளனரா என ஆய்வு செய்து வருகிறது. இக்குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், தமிழக காங்கிரஸ் சொத்து மீட்புக் குழுத் தலைவருமான கே.வி. தங்கபாலு தலைமையில் உறுப்பினர்களான முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு, அகில இந்திய காங்கிரஸ் இணைச் செயலர் நிதின் கும்பர்கர், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம், பெனட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் மேலவீதியிலுள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் து. கிருஷ்ணசாமி வாண்டையார் (தெற்கு), பி.ஜி. ராஜேந்திரன் (மாநகர மாவட்டம்), துணைத் தலைவர் கோ. அன்பரசன், மாநிலத் துணைத் தலைவர் பண்ணைவயல் ராஜாதம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் மன்னை மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.