தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிரசித்திப் பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலின் குளத்தில் கழிவு நீர் கலந்துள்ளது. கோவில் திருவிழாவின்போது பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய பின்னர், இந்த குளத்தில் குளிப்பது வழக்கம். ஆனால் தற்போது குளம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. குளத்தின் மூலமாக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் கோவில் திருவிழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. எனவே குளத்தில் பக்தர்கள் குளிக்கும் விதமாக குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து பக்தர்கள் சார்பில் ராஜ்குமார் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் குளத்தில் கழிவுநீர் கலந்து அசுத்தமாக காட்சி அளிக்கிறது.
கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கிவிட்ட நிலையில் குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுத்து உடனடியாக குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும். கோவிலின் நான்கு புறமும் சுற்றுச்சுவர் அமைத்து, கோவிலுக்குள் சமூக விரோத கும்பல்கள் நுழைவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.