திருச்சியில் இருந்து சென்னை சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று 11.50 மணிக்கு தஞ்சைக்கு வந்து பின்னர் சென்னை புறப்பட்டு சென்றது. இந்த ரயில் தஞ்சையை அடுத்த அய்யம்பேட்டை பகுதி சென்ற போது ரயிலில் ஒரு பெண் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. அவருடைய இடுப்புக்கு கீழே உடல் துண்டாகி கிடந்தது.
தலை உடல் கிடந்த இடத்தில் இருந்து 100 அடி தொலைவில் கிடந்தது. 2 கைகளும் துண்டான நிலையில் காணப்பட்டது. இதையடுத்து ரயில் என்ஜின் டிரைவர் தஞ்சை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. இதையடுத்து தஞ்சை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அந்த பகுதியில் வெகுநேரமாக அமர்ந்திருந்தது தெரிய வந்தது.
எனவே அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என தெரியவில்லை. மேலும் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரமும் தெரியவில்லை. பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.