பேராவூரணி அருகே வீடு புகுந்து நகை திருடிய அண்ணன், தம்பி கைது

56பார்த்தது
பேராவூரணி அருகே வீடு புகுந்து நகை திருடிய அண்ணன், தம்பி கைது
பேராவூரணி அருகே உள்ள அம்மையாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி, தமிழரசி. இருவரது வீடுகளிலும் கடந்த டிசம்பர் மாதம் நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம மனிதர்கள், தலா 8 பவுன் வீதம் தாலி செயின் உள்ளிட்ட 16 பவுன் நகைகளை பறித்துச் சென்றனர். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஆவணம் - நெடுவாசல் பிரிவு சாலையில் தனிப்படை காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போழுது பேருந்தில் இருந்து இறங்கிய இருவர் காவல்துறையினரைப் பார்த்ததும் ஓடினர். இருவரையும் விரட்டிப்பிடித்த காவல்துறையினர் விசாரணை செய்ததில், புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, வேதையன்குடி இடையர் தெருவைச் சேர்ந்த முத்துராமன் (25), காளிதாஸ் (22) இருவரும் அண்ணன், தம்பிகள் என்பதும் தெரியவந்தது.

நடத்திய தீவிர விசாரணையில், கடந்த டிசம்பர் மாதம் அம்மையாண்டி கிராமத்தில் 16 பவுன் நகைகளை 2 வீடுகளில் புகுந்து திருடியதையும் ஒப்புக்கொண்டனர். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர்கள் மீது 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. திருச்சிற்றம்பலம் காவல் உதவி ஆய்வாளர் பொன்னியின் செல்வன் மற்றும் காவல்துறையினர் குற்றவாளிகள் இருவரையும் பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி