பேராவூரணி: மதுக்கடைகளை அனுமதிக்க கூடாது; வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

57பார்த்தது
பேராவூரணி: மதுக்கடைகளை அனுமதிக்க கூடாது; வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
பேராவூரணி, நகர்ப்பகுதி மதுக்கடை எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆறு. நீலகண்டன், நிர்வாகி த. பழனிவேல் ஆகியோர் பேராவூரணி வட்டாட்சியர் இரா. தெய்வானையை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்கள். அம்மனுவில் கூறியிருப்பதாவது, பேராவூரணியில் உள்ள பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள், இயக்கவாதிகள், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளான மக்களைத் திரட்டி பேராவூரணி நகர்ப்பகுதி மதுக்கடை எதிர்ப்புப் போராட்டக் குழு என்ற ஓர் அமைப்பை உருவாக்கினோம். 

இந்தக் கூட்டமைப்பு சார்பில் நகர்ப்பகுதியில் உள்ள மதுக்கடைகளை அப்புறப்படுத்த பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி மதுக்கடை இல்லாத நகராக மாற்றியது. தற்போழுது மீண்டும் மாற்று வடிவில் மதுக்கடையை பேராவூரணி நகர்ப்பகுதிக்குள் நிறுவ பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிகிறோம். ஃபாரின் லிக்கர் (F. L-2) என்ற பெயரில் பார் வசதியுடன் உயர்தரத் தனியார் மதுக்கடையை மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தொடங்குவதற்கு, பணம் படைத்த ஒரு சிலர் முயற்சிப்பதாக அதிர்ச்சி தரும் செய்திகள் பரவுகிறது. ஏதேனும் ஒரு வடிவில் பேராவூரணியின் பெருமையை சிதைக்கும் வகையில் அமைக்கப்படும் மதுக்கடைகளை ஒருக்காலும் அனுமதிக்க கூடாது என்று தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.