சூரக்கோட்டை, ஒரத்தநாடு சாலியமங்கலம் பகுதியில் தொடர் மழை காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நெடுஞ்சாலையில் கொட்டி உலர்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உலர்களம் அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோல் ஒரத்தநாடு சூரக்கோட்டை பகுதியில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் கோடை முன் பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்த ஈரப்பதம் உள்ள நெல்லை உலர்த்த முடியவில்லை. மேலும் அரசு கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதியோ அல்லது உலர்களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகே உள்ள நெடுஞ்சாலையில் கொட்டிவைத்து தினசரி உலர்த்தி வருகின்றனர். நெடுஞ்சாலையில் நெல் உலர்த்துவதால் போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுவதுடன், தொழிலாளர்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே நெல்லை உலர்த்த உலர்களம் அமைத்துத் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.