தஞ்சையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு தலா 1,250 டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் பொது வினியோகத் திட்டத்திற்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த அரிசி மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,500 டன் அரிசி மூட்டைகள் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் தலா 21 வேகன்களில் தலா 1,250 டன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு பொது வினியோகத் திட்டத்திற்காக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.