தமிழ்நாடு அரசு கோட்ட அளவிலும், வட்டார அளவிலும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிமை திட்டத்தின்கீழ் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை பேராவூரணி எம். எல். ஏ அசோக்குமார் முன்னிலையில் மாற்றுத்திறனாளி மாணவர் நேற்று திறந்து வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்முறை மருத்துவம், தொழில்முறை பயிற்சி, மனவளர்ச்சி குன்றிய மற்றும் பேச்சு இடர்பாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புக்கல்வி பயிற்சி, மனநல ஆலோசனை, கண் பரிசோதனை, காது கேளாதோருக்கான பரிசோதனை மற்றும் பேச்சுப் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.