தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் புதிய சந்தை அமைக்க ரூ. 403 லட்சம் மதிப்பீட்டில் டென்டர் பெறப்பட்டு, நீலகண்ட பிள்ளையார் கோவில் அருகே சந்தை வேலை முடிவடையும் வரை தற்காலிக செட் அமைக்கப்பட்டு, கடந்த மாதம் பழைய ஆஸ்பெஸ்டாஸ் கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் பணி துவங்கியது.
வாரச்சந்தையில் கடை நடத்தும் வியாபாரிகள், தற்போது உள்ள இடம் சிறியதாக உள்ளதால், இந்த இடத்தில் சுவர் வைத்து கடைகள் கட்டினால் பொதுமக்கள் உள்ளே வந்து பொருட்கள் வாங்குவதற்கும் இடையூறாக இருக்கும் என்பதால், கடைகள் கட்டாமல் பெரிய அளவில் செட்டு அமைத்து, இதர அடிப்படை வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் செயல் அலுவலர் ராஜா தலைமையில், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், துணைத் தலைவர் கி. ரெ. பழனிவேல் மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகர வர்த்தக சங்கத் தலைவர் ஆர். பி. ராஜேந்திரன், அதிமுக நகரச்செயலாளர் எம். எஸ். நீலகண்டன், காய்கறி மொத்த வியாபாரி வி. எஸ். எம். மூர்த்தி, சந்தை ஏலதாரர் வேதபாக்கியம், முன்னாள் கவுன்சிலர் டி. கே. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினார்கள். ஏற்கனவே வாரச்சந்தை இயங்கி வரும் அதே இடத்திலேயே அனைத்து வசதிகளுடன், 24 ஆயிரம் சதுர அடியில் அமைக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.