உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கிரிவலப் பாதை மற்றும் ஆற்றுப் படுகைத் துறைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடியே 80 லட்சம் நிதியை தஞ்சாவூர் மாநகராட்சி ஒதுக்கி, தொல்லியல் துறையிடம் கடந்த 2022-ம் ஆண்டு கொடுத்தது.
ஆனால் பணம் ஒப்படைத்தும் இதுவரை எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை என்பதால், அந்த திட்டத்தை தஞ்சாவூர் மாநகராட்சி ரத்து செய்தது. ஆனால் ரத்து செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒதுக்கப்பட்ட நிதியை இந்திய தொல்லியல் துறை மீண்டும் ஒப்படைக்கவில்லை. இந்நிலையில் ரூ 4 கோடி 80 லட்சம் தொகையை வட்டியுடன் ஒப்படைக்குமாறு தஞ்சாவூர் மாநகராட்சி இந்திய தொல்லியல் துறையை கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. பல்வேறு பணிகளுக்கு நிதி கிடைக்காமல் கிடப்பில் உள்ள நிலையில் இந்திய தொல்லியல் துறைக்கு நிதி ஒதுக்கியும் பணிகள் மேற்கொள்ளாதது தஞ்சாவூர் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.