பூவாணம் ஊராட்சியில் பொது விநியோகக் கட்டடம், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.20 லட்சத்தில் கட்டப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் கடந்த 20.08.2022 இல் திறந்து வைத்தார்.
10 மாதங்களைக் கடந்த நிலையில் கட்டிடத்தில், அத்தியாவசியப் பொருட்கள் வைக்கப்படாமலும், அங்காடி செயல்படாமலும் உள்ளது. பொது மக்கள் தேவைக்காக எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட கட்டிடம் திறக்கப்படாமலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமலும் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர், கூட்டுறவுத் துறை அலுவலர்களிடமும் பலமுறை முறையிட்டும் இதுவரையில் அங்காடி கட்டிடம் செயல்படாமல் உள்ளது. பூவாணம் ஊராட்சி பொதுமக்களின் சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் எழிலரசன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 29.05.2023 வெள்ளிக்கிழமை அன்று மனு கொடுக்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜூன் 15 ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் தஞ்சைக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் உள்ளார்கள். அன்றைய தினம் பூவாணம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக அங்காடி கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என உறுதி அளித்துள்ளார்கள். பூவாணம் மக்கள் ஆவலோடு அங்காடித் திறப்பை எதிர்பார்த்து உள்ளனர்.