ஜோதி அறக்கட்டளை சார்பில் கோடைகாலம் முழுவதும் இயற்கை குளிர்பானங்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாநகரில் ஆண்டுதோறும் போக்குவரத்துக் காவலர்களுக்கு ஜோதி அறக்கட்டளை சார்பில் கோடைகாலம் முழுவதும் இயற்கை குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இத்திட்டத்தின் தொடக்க விழா தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் தலைமை வகித்து நகரப் போக்குவரத்து காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, பாதாம் பால் போன்றவற்றை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா. சோமசுந்தரம், நகரப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம். ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.